நங்கவரம் பகுதியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு சென்று விவசாயிகளிடம் சந்தித்து அதிக மகசூல் பெறுவது குறித்து புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக பேசினார். அதில் நங்கவரம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நாள் வரை சுமார் 4000 ஹெக்டேர் பரப்பளவு நெல் சாகுபடி செய்ய நாற்று நடவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நடவு பணிகள் தொடரும் வேலையில் நடவு செய்த பின் தங்களது பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதன் அவசியத்தை விவசாயிகளுக்கு விளக்கியும், பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தியும், பயிர் காப்பீட்டு செய்வதற்கான நடைமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், தமிழக அரசு வேளாண்மை துறை மூலமாக விதைகள், உயிர் உரங்கள், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்ற உயிர் பூஞ்சான கொல்லிகள், ஆர்கானிக் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், ஜிங் சல்பேட், வேளாண் கருவிகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, 50 சதவீத மானிய விலையில் பெற்று பயனடையவும், நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாக குளித்தலை வட்டாரத்திற்கு 36.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் நுண்ணீர் பாசனம் அமைத்து, பயன் பெற, விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் உளுந்து விதைகள், ஜிம் சல்பேட், உயிர் உரங்கள் வழங்கினார். மேலும் நங்கவரத்தில் இயங்கி வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் மகேந்திரன், நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் தனபால் அருள்குமார், நங்கவரம் துணை வேளாண்மை விரிவாக்க மைய கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Next Story