பராமரிப்பின்றி கிடைக்கும் பேருந்து நிலையம் பயணிகள் அவதி
Sivagangai King 24x7 |19 Oct 2024 2:28 AM GMT
சிவகங்கை மாவட்டம், புதுவயல் பேருந்து நிலையம் பராமரிப்பின்றி கிடப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் புதுவயலில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2001ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 2003ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. காரைக்குடி, மதுரை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மித்ராவயல், தச்சகுடி, பெரியகோட்டை, சாக்கவயல், ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் 5 க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் முற்றிலும் சேதமடைந்து கிடப்பதோடு மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாக்கடை தேங்கி நிற்கிறது. பேருந்து நிலையம் முழுவதும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பயன்பாடு இன்றி முடிக்கிடக்கிறது. பயணிகள் அமரும் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. புதுவயல் பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story