நாமக்கல் கவிஞருக்கு இன்று பிறந்த நாள் !

X
Namakkal King 24x7 |19 Oct 2024 11:55 AM ISTதமிழர்களின் இதயத்தில் சுதந்திர உணர்வை ஏற்படுத்திய, தேசிய கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், காவிரி கரை மீது அமைந்துள்ள மோகனுாரில், 1888 அக்டோபர் 19ல், வெங்கட்ராமபிள்ளை, அம்மணி அம்மாளுக்கு, 8வது மகனாக பிறந்தார் ராமலிங்கம். கடந்த, 1912ல், 5ம் ஜார்ஜ் மன்னர் உருவத்தை வரைந்து, மன்னரால் பரிசும், பாராட்டும் பெற்று, அவருடன் சமமாக விருந்துண்ட பெருமை கவிஞர் ராமலிங்கத்துக்கு உண்டு.நாமக்கல் நாகராஜர் அய்யரின் தொடர்பால், விடுதலை இயக்கத்தில் இணைந்து, 1932ல் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறையில் இருந்தார். 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது...', தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கொரு குணமுண்டு', கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்', ஆகிய பாடல்களை பாடி, சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர், தேசிய கவிஞர் ராமலிங்கம். அவரது உப்பு சத்தியாகிரக வழிநடைப்பாட்டு, எல்லோரது பாராட்டையும் பெற்றது. 1914ல், திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட வட்டார தலைவராகவும், 1921 முதல், 1930 வரை, நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும், 1953ல் சாகித்ய அகாடமி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 1971ல் பத்ம பூஷன் விருதும், 1956 மற்றும் 1962ல் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். 1949ல் சென்னை மாகாண அரசவை கவிஞராகவும் பதவி வகித்த கவிஞர், பல்வேறு பொறுப்புகளில் பாராட்டும்படி பணியாற்றினார்.நாமக்கல் கவிஞர் காப்பியங்கள் ஐந்து, கவிதை தொகுப்புகள், 15, கட்டுரை நூல்கள், 15, இலக்கிய நூல்கள், 14, வாழ்க்கை வரலாறுகள், ஏழு, இசை ஆய்வு நூல்கள், நான்கு, மொழி பெயர்ப்பு நூல்கள், மூன்று, நாடகங்கள், இரண்டு, திருக்குறள் உரை ஒன்று என, மொத்தம், 66 நூல்களை எழுதியுள்ளார். இன்று நாடு முழுவதும், அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
Next Story
