செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழா தொடங்கியது!
Thoothukudi King 24x7 |19 Oct 2024 11:20 AM GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு விளா பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் கொடி பட்டம் 4 ரதவீதிகளையும் சுற்றி வலம் வந்து கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அம்மன் திருத்தேரில் எழுந்தருளி 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து காட்சி தருவார். 11-ம் நாளான 28-ந்தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில், அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 12-ம் நாளான 29-ந் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழுவினர், கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story