சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்
Sankarankoil King 24x7 |20 Oct 2024 1:44 AM GMT
சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னா், கொடிப்பட்டம் வீதி சுற்றி கோமதிஅம்மன் சந்நிதிக்கு கொண்டுவரப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றதும் காலை 6.45 மணியளவில் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, கொடிமர பீடத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடிமரம் தா்ப்பைப்புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அக்.28இல் பிற்பகல் 12 45 மணியளவில் கீழ ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு கோமதி அம்பாள் எழுந்தருகிறாா். மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறாா். கோயிலில் அன்று இரவு 9 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.12 ஆம் நாளான அக்.29ஆம் தேதி சுவாமி- அம்பாள் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ மற்றும் கோயில் ஊழியா்கள், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Next Story