தந்தை, மகன் கொலை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுதாக்கல்:
Thoothukudi King 24x7 |21 Oct 2024 4:33 AM GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் மீண்டும் விசாரணை கேட்டு மனுதாக்கல் என்பது, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்தது.
தந்தை, மகன் கொலை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனுதாக்கல்: உயர்நீதிமன்றம் கருத்து ஞாயிறு 20, அக்டோபர் 2024 8:57:51 AM (IST) சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் மீண்டும் விசாரணை கேட்டு மனுதாக்கல் என்பது, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கமாகும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் சட்டவிரோதமாக போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அந்த சமயத்தில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டு சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரிடம் எனது தரப்பு விசாரிக்க அனுமதி கேட்டு கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது. எனவே கீழ் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது தரப்பில் மாஜிஸ்திரேட்டு சக்திவேலிடம் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, கீழ் கோர்ட்டில் ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டு சக்திவேல் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ளார். அந்த சமயத்தில் பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யவில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஏற்கனவே கீழ் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ஆஜராகி விரிவான சாட்சியம் அளித்துள்ளார். இப்படி இருக்கும்போது மீண்டும் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என கேட்பது இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் உள்ளது என தெரிவித்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Next Story