தாசில்தார், சர்வேயர் இழப்பீடு வழங்க உத்தரவு!
Thoothukudi King 24x7 |24 Oct 2024 3:25 AM GMT
நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத தாசில்தார் மற்றும் சர்வேயர் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 65 செண்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கயத்தாறு தாசில்தார் மற்றும் சர்வேயர் ஆகியோரை அணுகியுள்ளார். இதற்கான பணத்தையும் செலுத்தி விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் வரவில்லை. பல முறை நேரில் சந்தித்து நினைவூட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தாசில்தார் மற்றும் சர்வேயர் தபசில் உள்ள சொத்தை நான்கு மால் அளந்து அதற்குரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.20,000 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
Next Story