நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்
Tiruchengode King 24x7 |24 Oct 2024 10:30 AM GMT
நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில்186 பெண்கள், 96 ஆண்கள் என 282 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இது தவிர டி.பி.சி. பணியாளர்கள், தற்காலிக ஓட்டுனர்கள் என மொத்தம் 350 பேர் பணியாற்றி வரும் நிலையில், வரும் 31ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் அலுவலகத்தில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பெண்களுக்கு 650 ரூபாய் மதிப்பிலான பேன்சி சில்க் புடவைகளும், ஆண் பணியாளர்களுக்கு காக்கிச்சட்டை, காக்கி பேண்ட் என தலா 800 ரூபாய் மதிப்புள்ள ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 4 திரு நம்பிகள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கும் ஆண்களுக்கான முழுக்கால் சட்டை, மற்றும் மேல் சட்டை ஆகியவை வழங்கப்பட்டது. பெண் பணியாளர்கள் புத்தாடைகளை ஒருவருக்கொருவர் காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவரும் ஒன்றிணைந்து புத்தாடைகள் வழங்கிய நகர்மன்ற தலைவருக்கும், வழக்கறிஞர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் உள்ளிட்ட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சத்தமாக கூறினார்கள். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநம்பி தினேஷ் கூறியதாவது, சமூகத்தில் கேவலமாக பார்க்கப்படும் எங்களைப் போன்ற திருநம்பிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க அனைவரும் மறுத்து வரும் நிலையில் எங்களை மதித்து உழைக்க தயாராக இருந்தால், சக மனிதர்களாக மதிப்போம் என காட்டும் வகையில் வேலை கொடுத்து, இன்று தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்கி உள்ள நகர்மன்ற தலைவரை மனமார பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம். வேலை வாய்ப்புகள் இல்லாததால் கடைகளில் ஏறி, இறங்கி கைதட்டி காசு கேட்கும் நிலையை மாற்றி எங்களுக்கு வேலை வழங்கியது போல் இன்னும் பலருக்கும் வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
Next Story