தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.

தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை.
நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தேனீ வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கில் தகவல்.
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். வாழை நார் மற்றும் கோரை புல்லில் இருந்து பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்டப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு நம்மை சுற்றி எளிதாக கிடைக்ககூடிய பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசுத்துறை சார்பில் வழிகாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த முதலீட்டில் 100 சதவிகித அரசு மானியத்தில் தேனீ வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பின் மூலம் ஆண்டிற்கு 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்திட இயலும். இதனை கருத்தில் கொண்டு தேனீ வளர்ப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கு தோட்டக்கலை துறை சார்பில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வீடுகளிலேயே தேனீ வளர்ப்பதால் தங்கள் வீட்டு பயன்பாட்டிற்கும், அதனை சந்தைபடுத்தி வருமானமும் ஈட்ட இயலும். தேனீ வளர்ப்பினால் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க செய்வதன் மூலம் பழங்கள், காய்கறிகள் பயிர்களில் மகசூல் மற்றும் விளைப்பொருட்களின் தரத்தை அதிகரிக்க முடியும். வேளாண்மை மற்றும் சுற்றுப்புற சூழலில் நிலையான வளர்ச்சியை அதிரிக்க உதவுகிறது. பல்லுயிர் தன்னையை பராமரித்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தியை மேம்படுத்திட முடியும். தேன் சர்ம நோய்களுக்கு நிவாரணம், நினைவாற்றலை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துல், உடல் வெப்பத்தை தணித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. தேன் மெழுகு அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும், அரச கூழ் மருத்து தயாரிக்கவும், தேனீ மகரந்தம் மருத்துவ சத்து மிகுந்த பொருள், தேன் பசை இயற்கை மருத்துவ குணமிக்கது. தேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவாக பயன்படுத்தலாம். இன்றைய தினம் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீ வளர்ப்பு இடம் தேர்வு செய்தல், இலாபகரமான முறையில் தேனீ வளர்த்தல், தேனீ வளர்ப்பிற்கு மகரந்தம் அளிக்கும் முக்கிய தாவரம், பூச்சி மற்றும் நோய்கட்டுபாடு முறைகள், தேனீ அறுவடை, பதப்படுத்துதல், தேன் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி வழங்க உள்ளார்கள். எனவே, வீட்டிற்கு ஒரு தேனீ வளர்ப்பு என்று நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும். இக்கருத்தரங்கிற்கு வருகை தந்துள்ள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தொழில் முனைவோர்களாக உருவாகி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சியினை பார்வையிட்டு, தேனீ வளர்ப்பு குறித்த கையேட்டினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பி.பேபிகலா, துணை இயக்குநர்கள் எம்.புவனேஸ்வரி, (தோட்டக்கலைத்துறை), டாக்டர் எ.நாசர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), பயிற்சி வல்லுநர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story