பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு ஆலை ஊழியர்கள் சாலை மறியல்.

பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு ஆலை ஊழியர்கள் சாலை மறியல்.
நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் வழங்ககோரி பரமத்தி அருகே உள்ள தனியார் இரும்பு ஆலை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்.
பரமத்தி வேலூர்,அக்,. 24: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த இருக்கூரியில் தனியார் இரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தனியார் நிறுவனத்தின் கீழ் (வைரம் புரொடக்சன்ஸ்) ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் ரூ.32.59 இலட்சம் வழங்க வேண்டி 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படமுடிபாளையம் அருகே சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த தாசில்தார் முத்துகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் ஊதியம், போனஸ் வழங்குவதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டு விட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இரும்பு ஆலை தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story