ஆபத்தான நிலையில் சாலையோர திறந்தவெளி கிணறுகள்

ஆபத்தான நிலையில் சாலையோர திறந்தவெளி கிணறுகள்
திருப்புவனம் வட்டாரத்தில் ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் உள்ள கிணறுகளில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். தி. பறையங்குளத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் வளைவில் விபத்தை அபாயத்தில் திறந்த வெளி கிணறு உள்ளது.பெரும்பாலான கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி உள்ளது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இக்கிராமங்களில் திறந்த வெளி கிணறுகளை நம்பியும் விவசாயம் நடைபெறுகிறது.பெரும்பாலான கிணறு செங்கல் சுற்றுச்சுவர்களால் கட்டப்பட்ட கிணறுகள் ஆகும், தரை மட்டத்தில் உள்ள இக்கிணறுகளைச் சுற்றிலும் எந்த வித தடுப்பும் இல்லை. வளைவுப் பகுதியில் உள்ள கிணறுகளில் தவறி விழுந்தால் மீட்க கூட முடிவதில்லை. சில வருடங்களுக்கு முன் நான்கு வழிச் சாலையோரம் உள்ள திறந்த வெளி கிணற்றில் அடையாளம் தெரியாத உடல் மீட்கப்பட்டது. இதுபோல திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள திறந்த வெளிகிணறுகளால் அடிக்கடி விபத்து நேரிட்ட வண்ணம் உள்ளது.சாலையோரம் உள்ள கிணறுகளில் கம்பி வலைகள், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என போலீசாரும் வலியுறுத்தி இருந்தனர். ஆனாலும் இன்னமும் ஆபத்தான முறையில் சாலையோர கிணறுகள் உள்ளன.எனவே நெடுஞ்சாலைத்துறை ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர கிணறுகள் உள்ள இடத்தில் தடுப்புக்கம்பிகள், தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story