கனமழையால் வயல்களில் நீர் தேங்கி பூச்செடிகள் அழுகிவிட்டன.
Andippatti King 24x7 |26 Oct 2024 3:21 PM GMT
கிலோ ரூ.100-க்கு விற்ற செவ்வந்தி தற்போது ரூ.30 ஆக குறைந்து விட்டது. இதனால், பறிப்புக் கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே வயநாடு நிலச்சரிவால் ஓணம் பண்டிகைக்கும் பூ விற்பனை பாதிக்கப்பட்டது. இப்போது மழையால் பூ உற்பத்திக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது'
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வயல்களில் நீர் தேங்கி பூச்செடிகள் அழுகிவிட்டன.மேலும், மழையின் தாக்கத்தால் பூக்களிலும் கருகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைந்து பறிப்புக் கூலி கூட கொடுக்க இயலாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை, தெப்பம்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொத்தபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோழிக்கொண்டை, செண்டு பூ, மல்லிகை, துளசி, சம்பங்கி, பட்டன்ரோஸ், பன்னீர்ரோஸ், ரோஜா உள்ளிட்ட பூக்கள் இந்தப் பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் பலன் தருவதால் பல விவசாயிகள் பூ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தீபாவளி, சுபமுகூர்த்த தினங்கள், சபரிமலை சீசன், உள்ளிட்டவற்றை முன்வைத்து இப்பகுதியில் அதிகளவில் பூ விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அடிக்கடி இப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் நீர் தேங்கி பூச்செடிகள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. மழைபெய்த சில மணி நேரங்களில் நீர் வற்றினாலும் அடுத்தடுத்து பெய்யும் மழையால் தண்ணீர் வயல்களில் தேங்குகிறது. இதனால் பூச் செடிகள் அதிகளவில் அழுகி விட்டன. பாதிப்புக்கு உள்ளான செடிகள் அடுத்து துளிர்க்காமல் கருகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலன்தரும் நேரத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கிலோ ரூ.100-க்கு விற்ற செவ்வந்தி தற்போது ரூ.30 ஆக குறைந்து விட்டது. இதனால், பறிப்புக் கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே வயநாடு நிலச்சரிவால் ஓணம் பண்டிகைக்கும் பூ விற்பனை பாதிக்கப்பட்டது. இப்போது மழையால் பூ உற்பத்திக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
Next Story