புதிய மினி தொழில் பூங்கா அமைக்க: எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நடவடிக்கை.
Namakkal (Off) King 24x7 |29 Oct 2024 11:07 AM GMT
இராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா (டைடல் பார்க்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், மேயர் .து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் வசதியாக்கல் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.22.45 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக, அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை பெறும் நோக்கமாக பல்வேறு கடனுதவி திட்டங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உலக முதலீட்டாளர் மாநாடு - 2024 இல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1693.83 கோடி நிர்ணயிக்கப்பட்டு 325 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 8,832 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல், உள்கட்டமைப்பு, திறமைவாய்ந்த பணியாளர்கள் மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் கடனுதவி திட்டங்கள் மூலமாகவும் புதிய தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு விதமான மானிய உதவிகள் மூலமாகவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்களில் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.2.27 கோடி அரசு மானியத்துடன் ரூ.21.39 கோடி தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.2.00 கோடி அரசு மானியத்துடன் ரூ.6.50 கோடி தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில் மட்டுமின்றி சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது. நம் நாடு உற்பத்தியை மையமாக கொண்ட நாடு ஆகும். தொழில் தொடங்கி மேம்படுத்துதல் என்பதே நம் அரசின் நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட 850 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படுவதால் நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாமக்கல் மாவட்டம் தனியாக தோற்றுவிக்கப்பட்டது. புதியதாக மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு என புதியதாக மத்திய கூட்டுறவு வங்கியினை அறிவித்துள்ளார்கள். மேலும், சுமார் ரூ.90.00 கோடி மதிப்பில் டென்மார்க் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பால் பதப்படுத்தும் ஆலை, சுமார் ரூ.196 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் ஜே.சி.பி இயந்திரம், கோழி தீவனம் உற்பத்தி செய்தல், விசைத்தறி, உணவு தொழில், கல்யாண் ஸ்டோர், தையல் தொழில், மளிகை கடை, ஆண்கள் ஆடையகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கிட 34 நபர்களுக்கு ரூ.22.45 கோடி தொழில் கடனுதவிகளை வழங்கினார். எனவே அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி கொண்டு சுய தொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தங்கள் வாழ்வாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திட வேண்டும். இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி தங்கள் தொழிலை சிறப்பாக மேம்படுத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் வீ.சகுந்தலா, நாமக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைவர் ந.இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலாளர் பா.இராமசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.முருகன், மண்டல மேலாளர் க.ஸ்ரீநிவாஸ், மாவட்ட தொழில் மைய புள்ளி விபர ஆய்வாளர் கோ.ம.மகேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story