சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சத்துணவு திட்டம் சார்பில், சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இன்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சத்துணவு திட்டம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் சிறுதானிய விழிப்புணர்வு விழா மற்றும் சத்துணவு திட்டம் சார்பில் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆண், பெண் குழந்தைகள் என்ற சமூக வேறுபாடு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இன்றைய சமுதாயத்தில் அனைவரும் பெண் குழந்தை வேண்டும் என்றே எண்ணுகின்றனர். பல்வேறு அரசு துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாலின வேறுபாடு மறந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கி உள்ளார்கள். இத்தகைய நிலை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண், பெண் அனைவரும் சமம் என்றாலும் குடும்பத்தை சிறப்பாக நடத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. பெண்கள் அனைத்துவித பணிகளையும் பொறுப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் ஆகும். பெண் குழந்தைகளை பாதுகாத்து, அவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்குவது நம் அனைவரின் கடமை ஆகும். மேலும், சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. சிறுதானிய உணவை உட்கொள்வதால் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வு வாழ முடியும். தொற்றா நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார். மேலும், குழந்தைகளுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மா.பரமேஸ்வரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) சீ.சசிகலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story