சிவன்மலை முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழா ஆரம்பம், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு அணிந்து கொண்டனர்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிவன்மலை முருகனை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெறும், இதில் மதியம் 12:30 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்சியில் முக்கிய நிகழ்வான காப்பு கட்டுதல் சிறப்பாகும். 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சாமி கோவிலுக்கு சென்றார். இதில் தினமும் காலை மணி 10:30 மற்றும் மாலை 4:00 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெரும்.  இன்று பக்தர்கள் கூட்டம் சிவன்மலையில் நிரம்பியது. அரோஹரா கோஷம் விண்ணை முட்டியது. இதனால் கோவில் உள்பகுதி, ராஜகோபுரம் முன்பகுதி, வாகனம் நிறுத்தும் இடம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  இந்த கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த விழா வருகிற 9ம் தேதி வரை நடைபெறுகின்றது. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 7ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. 8ம் தேதி காலையில் அபிஷேக ஆராதனைகளும் மாலை 6 மணியளவில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாள் 9ஆம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்று சுவாமி மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story