தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர் : திரளான பக்தர்கள் தரிசனம்!
Thoothukudi King 24x7 |4 Nov 2024 1:07 PM GMT
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் 2-வது நாளான நேற்று தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-வது நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் 6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story