திருச்செந்தூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு
Thoothukudi King 24x7 |6 Nov 2024 5:15 AM GMT
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பு : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு 02.11.2024 முதல் 08.11.20234 அன்று வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 07.11.2024 அன்று மாலை 04.00 மணிக்கு நடைபெறும். 08.11.2024 அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. I .பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் (Diversion Route) 1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும். 2. குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும். 3. கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும். 4. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும். II. அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள். 1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 2. திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் கீழ்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 3. கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையததில் நிறுத்தி திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் திரும்ப செல்லவும். 4. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோனுக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் திரும்ப செல்லவும். III. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்வதற்கு சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், திருநெல்வேலி சாலையில் 7 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் TB சாலையில் 3 வாகன நிறுத்துமிடங்களும் (Green Pass), பகத்சிங் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு வாகனம் நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 20 வாகன நிறுத்துமிடங்கள் (Parking Places) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் (Parking) குறுக்கு நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமல் காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி சாலை மார்க்கமாகவந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக J.J.நகர் வாகன நிறுத்தம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள வாகன நிறுத்தம், பிரசாத்நகர் ரோடு IMA மஹால் அருகிலுள்ள வாகன நிறுத்தம், அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI) வளாக வாகன நிறுத்தம், மற்றும் ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 2. திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்குவரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருநெல்வேலி சாலையில் உள்ள Royal Enfield Showroom எதிரே உள்ள சுப்பையா Land வாகன நிறுத்தம், வியாபாரிகள் சங்க வாகன நிறுத்தம் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்), வேட்டையாடும் மடம் வாகன நிறுத்தம், அன்புநகர் வாகன நிறுத்தம், குமரன் Scan Center எதிரே உள்ள வாகன நிறுத்தம் (குமாரபுரம்), ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்தம் மற்றும் அருள்முருகன்நகர் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோன் எதிரே உள்ள சுந்தர் Land வாகன நிறுத்தம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் Land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 4. கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டின்ம் சாலை மார்க்கமாக வந்து திரும்பிச் செல்லும் வாகனங்கள். கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி FCI குடோன் எதிரே உள்ள சுந்தர் Land வாகன நிறுத்தம், சர்வோதயா சங்கம் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் Land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். 5. மேற்கண்ட சாலைகளிலுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தர்கள் கோவில் அருகில் செல்வதற்கு சிறப்பு அரசு நகர பேருந்துகள், மினி பேருந்துகள், வேன்கள் மற்றும் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதியிலுள்ள தேரடி அருகில் பக்தர்களை ,றக்கிவிட்டு திரும்பி செல்லும் போது அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் ஜங்ஷன், தெப்பகுளம் (முருகாமடம்) வழியாக செல்லும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story