நாமக்கல்: ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாசலிலேயே உயிர்வாழ் சான்றிதழ்- தபால் துறை ஏற்பாடு!
Namakkal King 24x7 |7 Nov 2024 2:32 PM GMT
பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, தபால்துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறையுடன் இணைந்து இந்த ஆண்டு, நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை, நாடு தழுவிய டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரச்சாரத்தை, இந்தியாவில் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் மேற்கொள்கிறது. சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு நேரில் சென்று, ஆயுள் சான்றை சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் மூலம்,ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடி, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்று (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.தங்கள் பகுதி தபால்காரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ நம்பர் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க முடியும். தற்போது முக அடையாளத்தை வைத்து சான்று வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி ஆயுள் சான்றை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story