திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!
Thoothukudi King 24x7 |10 Nov 2024 6:27 AM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக். 28-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நவ. 2ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, திருக்கல்யாண வைபவத்தையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக வந்து, தெப்பக்குளம் அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தெற்குரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சுவாமி -அம்மன் திருக்கோயில் சேர்ந்ததும் நள்ளிரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்திற்கு மொய் எழுதி, பிரசாதம்பெற்றுச் சென்றனர்.
Next Story