பள்ளி மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

பள்ளி மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
சிவகங்கை மாவட்டம், பள்ளி மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, கலைப்பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்து கிடக்கும் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும் 5-8, 9-12, 13-16 வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது. அதுமட்டுமன்றி, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் சிறார்களுக்கு, மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தி பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. அவ்வகையில், முதற்கட்டமாக 5-8, 9-12, 13-16 என்ற வயது வகைப் பிரிவில், சிவகங்கை மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைப்போட்டிகள் வருகின்ற 16.11.2024 அன்று சிவகங்கை, பனங்காடி சாலை, கேந்திரய வித்யாலயா அருகில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. மேலும், அக்கலைப்போட்டிகள் அனைத்துக்குமான முன்பதிவு காலை 09.00 மணிமுதல் சிவகங்கை, பனங்காடி சாலை, கேந்திரய வித்யாலயா அருகில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. 5-8, 9-12 வயது பிரிவு மாணவ, மாணவியருக்கான பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய கலைப்போட்டிகள் காலை 9.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும், போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் (Birth Certificate) வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 5 முதல் 8 வயது பிரிவு (01.06.2016 முதல் 31.05.2019 வரை), 9 முதல் 12 வயது பிரிவு (01.06.2012 முதல் 30.05.2015 வரை), 13 முதல் 16 வயது பிரிவு (01.06.2008 முதல் 30.05.2011 வரை) உள்ளவர்களாக போட்டியாளர்கள் இருத்தல் வேண்டும். பரதநாட்டியம் (செவ்வியல்) போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள், மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை, போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். குரலிசை போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் 40x30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். அதுமட்டுமன்றி, போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்கள் மற்றும் மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 0452 2566420 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9786341558 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story