புகார் தெரிவிக்க இணையதள முகவரி வெளியீடு

புகார் தெரிவிக்க இணையதள முகவரி வெளியீடு
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் வாயிலாகவோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில், சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர், திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர், மாவட்ட குழந்தைகள் நலகுழு உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டுலைன் உறுப்பினர்கள், ஆள்கடத்தல் பிரிவு காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் (District Task Force) மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிங்கம்புணரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வில், கடை நிறுவனங்களில் 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட 2 வளரிளம் பருவத்தினரை பணிக்கமர்த்திய 2 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகள் சிங்கம்புணரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தலா ரூ.20,000/- அபராதம் விதித்து, கடந்த 08.11.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் 2016ன்படி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும் (Occupation) தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் (Process) பணியமர்த்துவது குற்றமாகும். 14 வயது நிறைவடைந்த ஆனால் 18 வயது நிறைவடையாத வளர் இளம் பருவத்தினரை (Adolescent) இச்சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அபாயகரமான தொழில் தொடர்புடைய பணிகளான (Occupation) செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் ரூ.20,000/-த்திற்கு குறையாமல், ஆனால் ரூ.50,000/-த்திற்கு மிகாமல் அபாராதம் அல்லது 6 மாதங்களுக்கு குறையாமல், ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேற்படாமல் சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 (இலவச தொலைபேசி எண்) என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story