சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Komarapalayam King 24x7 |12 Nov 2024 1:23 PM GMT
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் சார்பில் கடன் நெருக்கடிகள் கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்ட ஞானசேகரன் குடும்பத்திற்கு நிதி உதவி வேண்டியும், இலவச வீட்டுமனை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் என்ற விசைத்தறி கூலி தொழிலாளியான இவர், மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதும் மனமுடைந்து மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் தனது குடும்பத்தை காப்பாற்ற வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக விசைத்தறி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடத்தியதின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யு. சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்களின் நடவடிக்கையால் உயிரிழந்த ஞானசேகரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், அந்த குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்றும், ஞானசேகரின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறித்தி நகரத் தலைவர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை கண்டித்தும், கோரிக்கைகள் வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, வெங்கடேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story