பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Rasipuram King 24x7 |15 Nov 2024 11:00 AM GMT
பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இவ்விழா(15.11.2024) கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P. இராமசுவாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும், பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்கள் தலா ஒன்று வீதம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், நாவல், நெல்லி, வேம்பு, நீர்மருது, புங்கன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து பழங்குடியினருக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. உமா, பழங்குடியின மக்களுக்கான அரசு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம். பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் நாளை 16.11.2024 முதல் 22.11.2024 முடிய பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்கள், முள்ளுக்குறிச்சி, போதமலை, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. எனவே, இவற்றை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த சிறப்பு முகாம்கள் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 18.11.24 அன்று கொல்லிமலை செங்கரை அரசு பழங்குடியினர் தொடக்கப்பள்ளி, 19.11.24 அன்று கொல்லிமலை வாழவந்தி நாடு அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி, 20.11.24 அன்று கொல்லிமலை பள்ளிக்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் தொடக்கப்பள்ளி, 21.11.24 அன்று போதமலையில் உள்ள கீழூர், மேலூர், கெடமலை, ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மேலூர் அரசு பழங்குடியினர் தொடக்கப் பள்ளியிலும், 22.11.24 அன்று மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் தொடக்கப்பள்ளி மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ. முருகன், பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி, முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கி. சிவசாமி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, வனச்சரக அலுவலர் ஆ. பழனிசாமி, வனவர் எம். அன்பரசு, வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story