நாமக்கல் ஐயப்பன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்த பக்தர்கள்!
Namakkal King 24x7 |16 Nov 2024 1:15 PM GMT
நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கியுள்ளனர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோவில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இதையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜை, ஆண்டு தோறும் கார்த்திகை, 1ல் துவங்கும். அன்று முதல், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்குவர். ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள், இருமுடி கட்டி, கோவிலுக்கு சென்று வந்து, விரதத்தை முடித்துக் கொள்வர். இந்த ஆண்டு, ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, (கார்த்திகை 1) நாமக்கல் - மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில் நடந்தது. கோவில் குருசாமி மற்றும் அர்ச்சகர் முன்னிலையில், மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், விரதம் கடைபிடிக்கத் துவங்கினர். கோவில் குருசாமி, குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 1600 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து சென்றனர். கார்த்திகை முதல் நாள் வழக்கத்தை காட்டிலும், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.ஐயப்பன் கோவில்களுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் எல்லாம் நேற்று முன்தினமே மாலைகள், காவி வேஷ்டிகள், சுவாமி படங்கள், பஜனை பாடல்கள் அடங்கிய புத்தகம், பூஜை பொருட்களை எல்லாம் வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.
Next Story