ரயில் நிலைய நடைமேடையை உயர்த்த வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை!
Thoothukudi King 24x7 |17 Nov 2024 7:03 AM GMT
காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை விரைவாக உயர்ந்திடக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் வீரபாண்டியன்பட்டினம் பீ.ஜி.ஆர். ரிசார்ட் கேளரங்கில், மாவட்டத் தலைவர் பீ. மீராசா மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் கே. மீராசா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவீ ஏரல் ஷாஹுல் ஹமீத் பாக்கவீ கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுக உரையாற்றினார். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மறைந்தவர்களின் மக்/பிரத்திற்காக /பாத்திஹா ஓதி, துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அண்மையில் காலமான கட்சியின் நிர்வாகிகள், அவர்களது உறவினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், அவர்களின் வெற்றிக்கு வழிவகை செய்த - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் லீக் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், 2023 டிசம்பர் மாதம் நிகழ்ந்த கனமழை இயற்கைப் பேரிடரின்போது உடனடியாக உதவிகளையும் நிவாரண பணிகளையும் செய்து தந்த தமிழ்நாடு முதலமைச்சர், மாநில அமைச்சர்களான பெ. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தும், குரும்பூர் அழகப்பபுரத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்றும், காயல்பட்டினத்தில் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்டக் கோரியும், காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை விரைவாக உயர்ந்திடக் கோரியும், கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட குளறுபடியான வார்டு மறு வரையறையை நீக்கிவிட்டு, அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யும் முறையான வார்டு மறு வரையறையை செய்யக் கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்சியின் அனைத்து கிளைகளையும் வலுப்படுத்திடவும், கிளைகள் இல்லாத பகுதிகளில் புதிய கிளையை உருவாக்கிடவும், இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பு அணிகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் அன்று தூத்துக்குடியில் பொதுக் கூட்டத்தை நடத்திடவும், வரும் ரமழான் நோன்பு மாதத்தில், மாவட்டத்தில் உள்ள நலிந்த மக்களுக்கு வழமை போல நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும், வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மாநாட்டை விமரிசையாக நடத்திடவும், இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காயல்பட்டினம் நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் நன்றி கூற, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. சாலிஹ் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இந்தக் கூட்டத்தில், என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, பெத்தப்பா சுல்தான், ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ், என்.டீ. அஹ்மத் சலாஹுத்தீன் உள்ளிட்ட மாவட்ட - நகர நிர்வாகிகளும், மாவட்டத்தின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story