மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |18 Nov 2024 12:37 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 489 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் 75-வது காசநோய் வில்லைகளை வெளியிட்டு, காசநோய் வில்லைகளை 48 அரசுத்துறை அலுவலர்களுக்கு பிரிந்து வழங்கினார். நாமக்கல் மாவட்டம் காசநோய் வில்லைகள் விற்பனையில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு சாதனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு 74-வது காசநோய் வில்லைகளை முழுமையாக விற்பனை செய்த 14 அரசுத்துறை சார் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,830/- மதிப்பில் மடக்கு குச்சி மற்றும் கண் கண்ணாடி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,272/- மதிப்பில் ப்ரெய்லி கடிகாரம், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.580/- மதிப்பில் முழங்கை ஊன்றுகோல், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.730/- மதிப்பில் கிரட்சஸ் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,560/- மதிப்பில் காதொலி கருவிகள் என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33,022/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மரு.இர.வாசுதேவன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story