உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |21 Nov 2024 11:40 AM GMT
தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மோகனூர் வட்டத்தில் 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அன்று காலை 9 மணி முதல் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, ஆதிதிராவிட நலத்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத்துறை, உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2-வது நாளான இன்று மோகனூர் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் வட்டம், தோளூர் ஊராட்சி வாரச்சந்தையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு, தாங்கள் வாழும் பகுதிகளை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தி, அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும், ஆடு வளர்ப்பு குறித்தும், அதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, தோளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவினை வழங்கி அதன் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை சேகரிப்பதற்கான வாகனத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு சுற்றுப்புறத்தினை தூய்மை செய்திடவும் அறிவுறுத்தி, வாகனத்தினை இயக்க வைத்து பார்வையிட்டார். கிராம பகுதிகளில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் சேகரித்து வைப்பதை தவிர்த்து டெங்கு ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க பொது மக்களிடம் அறிவுறுத்தினார்.பரளி ஊராட்சி, கீழ்பரளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, சமையல் கூடத்தில் உணவுப்பொருட்களின் இருப்பு, பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வளையப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருகை தந்த பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மோகனூர் பேரூராட்சி பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுபொருட்களின் தரம், துணிப்பை பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, பெண் பயணிகளிடம் விடியல் பயண திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதனை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மோகனூர் பேரூராட்சியில் உள்ள உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக 20.11.2024 அன்று இரவு மோகனூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் விவரம், தினசரி உணவு பட்டியல், உணவின் தரம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்து, மாவட்ட ஆட்சியர் விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மோகனூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
Next Story