தேசிய தொல்குடியினர் தினம் அமைச்சர் மதிவேந்தன்‌ பங்கேற்பு..

தேசிய தொல்குடியினர் தினம் அமைச்சர் மதிவேந்தன்‌ பங்கேற்பு..
தேசிய தொல்குடியினர் தினம் அமைச்சர் மதிவேந்தன்‌ பங்கேற்பு..
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தேசிய தொல்குடியினர் தினம் 2024 -ஐ முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள், தேசிய தொல்குடியினர் தினம் 2024-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 164 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும், 43 பயனளிகளுக்கு அரசு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக, பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட தனி கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாடு முழுவதும், நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் தேசிய தொல்குடி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடியினர் தினத்தை கொண்டாடும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டுவருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, வினாடி – வினா, மாறுவேட போட்டி, பாட்டு போட்டி, நாடகம் மற்றும் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், நீளம் தாண்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 10 பழங்குடியின அரசு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட 1629 மாணவ மாணவியர்களில் 589 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளது. குறிப்பாக, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 82 மாணவர்கள் மற்றும் 82 மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்கள் கடந்த 16.11.2024 முதல் தொடங்கப்பட்டு 22.11.2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இம்முகாம்களில், 18 துறைகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டது. இதுவரை, நடைபெற்ற தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம்களில் சுமார் 750 மணுக்கள் பெறப்பட்டு 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, 9 நபர்களுக்கு பயிர் கடன், 9 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், 22 நபர்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள், 2 பட்டா மாறுதலுக்கான ஆணை நபர்களுக்கும், 1 மாற்றுத்திறனாளிக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு கடனுதவிக்கான காசோலை என மொத்தம் 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, பழங்குடியின நல திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ச.பிரபாகரன், உதவி இயக்குநர் (வேளாண்மைத் துறை) திருமதி உமா மகேஸ்வரி, இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story