ஆன்லைன் அபராதம் லாரி உரிமையாளர்கள் பாதிக்காதவாறு, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ்
Namakkal King 24x7 |22 Nov 2024 2:21 PM GMT
வருகின்ற 2025 ஜனவரி 2-வது வாரத்தில் பொதுக்குழு கூட உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளும் வகையில் வேலை நிறுத்தம் அறிவிக்கலாமா? என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம், அதன் தலைவர் தனராஜ் தலைமையில், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டு லாரி தொழிலின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், தொழிலில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள், குறித்து விவாதித்தனார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ்..... சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்களில் மீது ஆன்லைன் அபராதம் விதிக்கும் நடைமுறையில் லாரி உரிமையாளர்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறிழைக்கும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.ஆனால் எவ்வித விதி மீறலும் இல்லாத லாரிகள் மீதும் சரக்குகளை ஏற்றும் அல்லது இறக்கி வைக்க காத்திருக்கும் லாரிகள் மீதும், ஆன்லைன் அபராதம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் விதிக்கப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் அபராதத்தால் பல பேர் லாரி தொழிலை விட்டுச் சென்று விட்டனர். லாரி ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுவதால் இந்த தொழிலை மேலும் நலிவடையச் செய்துள்ளது.லாரிகளை தகுதிச் சான்றுக்காக புதுப்பிக்கும்போது ஒட்டப்படும் ஒளிரும் ஒட்டுவில்லை (Reflect Sticker)குறித்தும், பழைய லாரிகளை புதுப்பிக்கும்போது ஏற்கனவே ஒட்டப்பட்ட ஒட்டு வில்லைகள் குறித்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் உரிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். பழைய லாரிகளுக்கு பழைய ஒட்டு வில்லையே போதுமானது என்றும், புதிய லாரிகளுக்கு மட்டுமே புதிய ஒட்டு வில்லைகளை ஒட்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து ஆணையர், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அதனை பின்பற்றாமல், வேண்டுமென்றே லாரி தகுதிச் சான்று புதுப்பித்தலை கால தாமதம் செய்கின்றனர். மேலும், லாரி, சரக்கு வாகனங்களை பதிவு செய்யும்போது அதற்கான பதிவுச் சான்றிதழ்கள் தபால் மூலம் மட்டுமே, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து தற்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு காலதாமதம் ஏற்பட்டு, உரிய நேரத்தில் சரக்குகள் கொண்டு செல்லாமல் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அமைச்சருக்கும் நேரில் கோரிக்கை அளித்துள்ளோம். எனவே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன புதுப்பிப்பு உரிம சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அல்லது அவர்கள் நியமிக்கும் நபர்களிடம் நேரடியாக அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு வழிவகை செய்ய வேண்டும். வருகின்ற 2025 ஜனவரி 2-வது வாரத்தில் பொதுக்குழு கூட உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மேற்கண்ட பிரச்னைகள் குறித்து மாநில சம்மேளன லாரி உரிமையாளர்கள் முடிவு எடுத்து, வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளும் வகையில் வேலை நிறுத்தம் அறிவிக்கலாமா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும். தென்மாவட்டங்களில் சரக்கு லாரிகள் கொண்டு செல்லும்போது பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து அவற்றை பெருமளவில் குறைத்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.50 இலட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு, சரக்குகளை கொண்டு செல்ல இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து மகாராஷ்டிரா மாநில எல்லை ஜல்கி வரை பல்வேறு சோதனை சாவடிகளில், காவல்துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் சரக்கு லாரிகளை நிறுத்தி, முறைகேடாக பணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் லாரி தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நிர்வாகிகள், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) உடன் இணைந்து, தமிழ்நாடு எல்லை, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நேரடியாக சென்று, காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கோரிக்கை மனு நேரில் வழங்க உள்ளோம். இதுபோன்ற முறைகேடான செயலில் ஈடுபட வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழகத்தில், 33 காலாவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை அந்த சுங்கச்சாவடிகள் நீக்கப்படவில்லை. இந்த நிலையில் லாரிகளுக்கு GPRS முறையில் சுங்கம் வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. எவ்வளவு கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் பயணிக்கிறோமோ அந்த அளவிற்கு சுங்கம் ஆன்லைனில் வசூலிக்கப்படும் என்ற புதிய முறை GPRS மூலம் வரவுள்ளது. இதுகுறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் மத்திய- மாநில அரசுகளிடம் தங்கள் நிலைபாட்டை அறிவிப்பார்கள் என்றும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேட்டியின் போது தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தாமோதரன் மற்றும் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சாத்தையா,சின்னுசாமி ராஜேஷ், சுப்பு, நிஜாத் ரகுமான், செல்வராஜ், சுப்ரமணி, முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Next Story