உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை உயர்வு, அரசுப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பசியினை போக்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மாணவிகள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், எடை குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட ஊட்டசத்து உறுதி செய் திட்டம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், கர்ப்பிணி பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து 10 மாதங்களும் பரிசோதனை செய்து கொண்டு தங்கள் உடல் நலனையும், குழந்தையின் வளர்ச்சியையும் அறிந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் ஊட்டசத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு புரோட்டீன் பவுடர், பேரிச்சம்பழம், குடற்புழு நீக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் தவறாமல் போட்டு, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிப்பது நம் அனைவரது கடமை ஆகும். தமிழ்நாடு அரசும் கல்வியை ஊக்குவித்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தற்போது மழை காலம் என்பதால் கொசுவால் பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரம் என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும். நல்ல தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்ப கூடிய கொசுகள் உற்பத்தியாகின்றது. டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும். வீடுகளில் குடிநீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். நீர் தேக்காத வகையில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொண்டு நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வேண்டும். பெண்களை தொழில் முனைவோர்களாக ஊக்குவித்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி வழங்கி வருகின்றார்கள். இப்பகுதியில் பெண்கள் வீடுகளிலேயே விசைத்தறி மூலம் சேலை நெசவு செய்து சுய தொழில் மேற்கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றார்கள். இதுபோல அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 மற்றும் 181 உள்ளிட்ட எண்களில் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விபரம் இரகசியமாக பாதுகாக்கப்படும். இன்றைய நவீன உலகில் குழந்தைகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. நம் கிராமம் மற்றும் நம் குழந்தைகளை தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியினை வழங்கி அவர்களை சமுதாயத்தில் உயர்நிலை அடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பொன்னி மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிறப்பித்தார். இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story