குஜராத் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் மாயம்!

குஜராத் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் மாயம்!
விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான இளைஞரை விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனசேகர்- கல்யாண சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் இதில் இரண்டாவது மகன் அண்ணாதுரை(29). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி சந்தன செல்வி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அண்ணாதுரை தனியார் மீன்பிடி தொழில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  இவர் கடந்த வாரம் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் கொச்சியிலிருந்து குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடிப்பதற்கு வலை வீசும்போது அண்ணாதுரை தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அண்ணாதுரை உடன் மீன் பிடிக்க சென்றவர்கள் கடலில் குதித்து அண்ணாதுரை தேடி உள்ளனர்.  நீண்ட நேரம் தேடியும் அண்ணாதுரை கிடைக்காததால் இது தொடர்பாக அவரது குடும்பத்திற்கு அண்ணாதுரை பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அண்ணாதுரையின் பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம் பகவத்திடம் கடலில் தவறி விழுந்த தனது மகன் அண்ணாதுரையை கண்டுபிடித்து தரும்படி மனு அளித்துள்ளனர்.  தற்போது வரையில் கடலில் விழுந்த அண்ணாதுரையை தேடி வருவதாக குஜராத் அதிகாரிகள் கூறியதாக மீன் பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாதுரையின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கடலில் தவறி விழுந்த அண்ணாதுரை நிலை என்ன ஆனது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். மேலும் அண்ணாதுரை விரைவில் கண்டுபிடித்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story