ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பல்வேறு அமைப்பினர் ஆர்பாட்டம்
Rasipuram King 24x7 |25 Nov 2024 1:56 PM GMT
ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: பல்வேறு அமைப்பினர் ஆர்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினர். ராசிபுரம் நகரின் வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு நகரின் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றவையும் நடைபெற்றது. இந்நிலையில் ரூ.10.58 கோடி மதிப்பில் அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா நவ.24-ல் நடைபெற்றது. இதனையடுத்து, பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினர், ராசிபுரம் மக்கள் நலக்குழுவினர், வணிகர் சங்கங்கள், பல்வேறு கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் திருமண மண்டபத்தில் நவ.25-ல் ஆலோசனை கூட்டம் நடத்திட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், திடீரென கூட்டம் நடத்திட தனியார் மண்டபம் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் பல்வேறு அமைப்பினரும் திருமண மண்டபத்தின் முன்பாக அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசை கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்ய கூடாது. எனவும் இதே நிலை நீடித்தால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் சாலை மறியல் போன்றவை நடைபெறும் எனவும் தெரிவித்து கோஷமெழுப்பினர். இதில் போராட்டக்குழுவை சேர்ந்த எம்.பாலசுப்பிரமணியம், நா.ஜோதிபாசு, நல்வினை செல்வன், வி.பாலு, ஜெ.ஜெயபிரகாஷ், முருகன், வி.சேதுராமன், பாச்சல் ஏ.சீனிவாசன், கோபால், பொன்னுசாமி, தனசேகர், மோகன்தாஸ் , முன்னாள் கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள்,குழுவின் நிர்வாகிகள், சேவை அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆகியோரும் பங்கேற்று பேருந்து நிலையம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.
Next Story