பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 3,812 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் தகவல்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் மற்றும் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" ஊட்டசத்து பெட்டகங்களை பெற்ற தாய்மார்களிடம் அதன் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவே தான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 2023- 2024 ஆம் ஆண்டு முதல் கட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து நிலையில் உள்ள 1,018 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து நிலையில் உள்ள 1,281 குழந்தைகள் என மொத்தம் 2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் (2024 - 2025) கடுமையான ஊட்டச்சத்து நிலையில் உள்ள 1,874 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து நிலையில் உள்ள 1,938 குழந்தைகள் என மொத்தம் 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட மருத்துவர் ச.உமா, தெரிவித்தார். "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் ஊராட்சியை சேர்ந்த கவியரசி தெரிவித்ததாவது, என் பெயர் கவியரசி. என் கணவர் பெயர் தினேஷ். நாங்கள் நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் ஊராட்சி, முதலியார் தெருவில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. எனக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தோம். என் குழந்தை குறைவான எடையில் பிறந்த்து. மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் என் குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். என்னை கீரை, பேரிச்சம்பழம், பழ வகைகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தினார்கள். எந்த மாதிரியான சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தெரிவித்தார்கள். மேலும், அங்கன்வாடியில் சத்து மாவு வழங்கினார்கள். குழந்தைக்கு சரியான இடைவெளியில் தடுப்பூசி போட்டு, எடையை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். தற்போது எனக்கு "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி உள்ளார்கள். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் எங்களது வீட்டிற்கு நேரில் வந்து என்னையும், என் குழந்தையையும் சந்தித்து நலம் விசாரித்து, ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள பொருட்களை சரியாக சாப்பிடுமாறும் அறிவுரை கூறினார். இதுபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார். "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கார்த்திகா அவர்கள் தெரிவித்தாவது, என் பெயர் கார்த்திகா, நான் மோகனூர், சுப்பிரமணியபுரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தைக்கு 4 வயதாகிறது. தினசரி அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அங்குள்ள மற்ற குழந்தைகளுடன் கல்வி கற்று விளையாடி வருகிறாள். இரண்டாவது குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதால் அங்கன்வாடி மையம் மூலம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி உள்ளார்கள். மேலும், குழந்தையின் எடை, உயரம் அளவீடு செய்து வருகின்றார்கள். குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்கள் கட்டாயம் தாய்பால் மட்டுமே வழங்க வேண்டுமென அறிவுறுத்தி, சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள பொருட்களை சாப்பிடுமாறு தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசும் பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றார்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலனை காத்திட "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் ஊட்டசத்து பெட்டகத்தை வழங்கி உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் எங்களை நேரில் சந்திந்து ஊட்டச்சத்து பெட்டகத்தின் பயன் குறித்து கேட்டறிந்து, குழந்தையை நன்கு பராமரிக்குமாறும், 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே வழங்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார். இத்தகைய சிறப்பான திட்டங்களை தாய் உள்ளத்தோடு செயல்படுத்தி தாய் மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
Next Story