இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |26 Nov 2024 2:12 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டினை முன்னிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை அனைத்து துறை அலுவலர்களும் வாசித்தனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள். மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை ”இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்” அனைத்து துறை அலுவலர்களும் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) இரா.ஜெயசந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story