காங்கேயத்தின் பெருமிதம் காங்கேயம் காளைகள் - எப்போது காளை சிலை வைக்கப்படும்? 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை நம்பி உள்ளனர் மேலும் காங்கேயம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது காங்கேயம் காளைகள் தான் அந்தக் காளையின் சிலை அமைக்க இன்று வரை பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது
காங்கேயத்தின் பெருமிதம் காங்கேயம் காளைகள் - எப்போது காளை சிலை வைக்கப்படும்?  காங்கேயம் என்றாலே காளைதான் புகழ்    காங்கேயம் என்றாலே காளைக்கு புகழ் பெற்ற ஊர். உழைப்புக்கும் கம்பீரத்துக்கும் பெயர் பெற்ற காங்கேயம்  காளைகளின் பிறப்பிடம் காங்கேயமே ஆகும். காங்கேயம் இன மாடுகள் உலக புகழ்பெற்றவை ,  குறைவான உணவை உட்கொண்டு கடினமாக உழைக்க கூடியது, அழகான கொம்புகளையும் , பெரிய திமிலையும் , வலிமையான உடல் அமைப்பையும் , கம்பீரமான தோற்றத்தையும் கொண்ட காங்கேயம் இன காளைகள் இந்த மண்ணின் சிறப்பு அடையாளம் ஆகும் . சத்தான பாலை தரும் காங்கேயம் இன பசுக்கள் இன்றளவும் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக கால காலமாக ஆச்சி மாடு என்ற பெயரில் வழங்கப்பட்டு வருவது இதன் கூடுதல் சிறப்பு.  அலங்காநல்லூர் ,  பாலமேடு போன்ற புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுகளின் கதாநாயகனே  காங்கேயம் காளைகள் தான். மேலும் காங்கேயம் அருகே உள்ளது கண்ணபுரம் இங்கு வருட வருடம் மாட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம்.  இதற்க்கு   திருப்பூர்,   ஈரோடு,  நாமக்கல், கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான மாடுகள் விற்பனைக்காக வருவது வழக்கம் வாங்குவதற்கு கேரளா, கர்நாடக ,பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாடுகள் வாங்குவதற்கு விவசாயிகள் கூடுவது வழக்கம். கம்பீரத்தின் அடையாளம் காங்கேயம் காளைகள் தமிழகத்தைப் பொருத்தமட்டில் மாட்டிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு உழைப்பிற்கும் உதிரத்துக்கும் உள்ள தொடர்பானது. உழைக்கும் அந்த உன்னத உயிர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை, உழைத்த களைப்பு தெரியாமல் இருக்க ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டையும் நடத்தி வருவது நீண்ட நெடிய வரலாறு என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் தமிழகத்தின் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாடுகள் பர்கூர் மாடுகள், மதுரை பகுதியில் வளர்க்கப்படுபவை புளியகுளம் மாடுகள், தஞ்சாவூர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகள் உம்பளச்சேரி மாடுகள், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகள் ஆலம்பாடி என்றும், மணப்பாறை பகுதியில் மணப்பாறை மாடுகள் என்று ஊருக்கு ஏற்றார் போல் பெயர் பெற்று விளங்குகின்றது. இருந்தும் தென்னக மண்ணில் காளைகள் என்றாலே காங்கேயம் காளைகள் தான் அனைவரின் ஞாபகத்துக்கு வரும். உலக அளவில் உற்று நோக்க வைக்கும் இவ்வினம் காளைகளை ரசித்து உரக்கச் சொல்வார்கள் ஆம் அப்படி ஒரு கம்பீரமான காங்கேயம் காளைகள் பொலிவும், வலிமையும் கொண்ட இந்த மாட்டு இனங்கள் உறுதிக்கும் உழைப்பிற்கும் பெயர் பெற்றவை .ஆட்சி மாடு என்ற வழக்கத்தில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் மாட்டு இனங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் மயிலை எனப்படும் வெள்ளை நிறம் கொண்டவை, காரி என்று அழைக்கப்படும் கருப்பு நிறம் கொண்டவை.செவலை என்ற சிவப்பு நிறமுடையது ஆகும். களைப்பு பாராமல் உழைக்கும் காங்கேயம்  இன மாடுகள் அனைத்து விதமான விவசாய வேலைகளுக்கும் மாட்டு வண்டி இழுக்கவும் உகந்தவை. எருதுகள் அதிகம் வலிமை வாய்ந்த கால்நடைகள் என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைமிக்க உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளைகளின் வழித்தோன்றலை அலசினோம் என்றால் ஆரம்ப காலகட்டத்தில் காங்கேயம் காளைகள் மிகச் சிறிய உருவத்தில் இருந்துள்ளதாகவும், 100 ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் என்பவர் காங்கேயம் காளைகளின் அழகை மேலும் மெருகேற்ற கர்நாடகா அமித் மகால் பகுதிகளில் வளர்க்கப் பட்ட பூர்ணி மாடு என்ற மாட்டை வாங்கி காங்கேயம் மாட்டோடு இனம் சேர்த்து இன்றைக்கு இருக்கும் காங்கேயம் காளைகள் உருவாக்கப்பட்டது. தமிழகத்தை தாயமாக கொண்ட காங்கேயம்  காளைகள் வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மை உடையது. இப்படி சங்க காலம் தொட்டு அறியப்பட்டு வரும் காங்கேயம்  காளைகளின் தடத்தை மட்டுமே அறிய முடியும் என்ற அவளத்தில் அழியும் பட்டியலில் இடம் பெற்று இருந்த வேதனை அளித்த வேலையில் ஜல்லிக்கட்டு புரட்சி என்று அழைக்கப்படும் மெரினா புரட்சியின் தொடர்ச்சியாக மீண்டும் நாட்டு மாடுகள்,  காங்கேயம்  காளைகள் போன்றவற்றை விவசாயிகள் மட்டுமின்றி இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை  ஆர்வத்துடன் வளர்க்க ஆரம்பித்து விட்டனர். காங்கேயம் காளை சிலை வைக்க மறுக்கப்படும் ரகசியம் என்ன?  எவ்வாறு உலக புகழ் பெட்ரா காளைக்கு காங்கேயத்தில் சிலை வைக்க அரசு அனுமதி வழங்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் வாக்குறுதியாக அனைத்து கட்சியும் அறிவிக்கும் பின்னர் தேர்தல் முடிந்தவுடன் காங்கேயம் காளை சிலை வைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஆனால் இதே மாவட்டத்தில் உள்ள உடுமலை தாலுகாவில் கடந்த 20.09.2024 அன்று  காங்கேயம் காளையுடன்  ஜல்லிக்கட்டு ஏர்தலுவுதல் சதுக்கத்தை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்தார்.மேலும் அருகே உள்ள ஈரோடு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக காங்கேயம் செல்லும் சாலையை பார்த்தது போல் சிலை வைக்கப்பட்டு அதற்க்கு காளைமாடு பேருந்து நிறுத்தமாகவும் உள்ளது. கோவை விமான நிலையம், கோவை ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளிலும் காங்கேயம் சிலை வைக்கப்பட்டுள்ளது.ஆனால் காங்கேயம் காளைக்கு பெயர் பெற்ற காங்கேயத்திற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி வழங்காதது இப்பகுதி மக்களையும் விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொறுப்பேற்று பின்னரும் காங்கேயம் காளை சிலை அமைக்க பலமுறை அனுமதி கோரியும் பலமுறை இடம் தேர்வு நடைபெற்ற பின்னரும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டதின் ரகசியம் என்ன என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் 06.11.2020 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து காளை சிலை அமைக்க கோரிக்கை மனுவை வழங்கினார். அதே தினம் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் காங்கேயம் காளை சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். அதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படவே அந்த பணியானது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் காங்கேயம் ரவுண்டானாவில் காங்கேயம் காளைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார் அதே போல் மு.க.ஸ்டாலினும் காளை சிலை அமைக்கப்படும் எனவும், காங்கேயம் சட்டமன்ற வேட்பாளராக இருந்த மு.பெ.சாமிநாதனும் இதே வாக்குறுதியை அறிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி பெற்றும் இதே தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்று  காங்கேயம் காளை சிலை அமைக்கவில்லை.அதன் பின்னர் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய ஆணையரால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அனுமதி கேட்டு 02.03.2022 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுமதி வழங்க இயலாது குறித்து காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கு 24.03.2022 அலுவலக கடிதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்,காங்கேயம் மாட்டு இனங்களை  வளர்க்கும் ஆர்வலர்கள், இளைஞர்கள் மத்தியில் காங்கேயம் காளை சிலை அமைத்திட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துக்களை தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் புறக்கணித்து வருவது ஒருபுறம் வேதனை அளித்து வந்த நிலையில் நாளை காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரத்தில் கலந்துகொள்ள விருப்பப்படுபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வரை சுமார்  2500 க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் காளைகளுக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் போல் காங்கேயம் இன காளை சிலை வைக்க போராட்டம் துவங்கப்பட்டதாக காங்கேயம் பகுதியில் வாட்ஸ் ஆப்,பேஸ்புக்,டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுவது காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அறவழியில் போராட்டம் அறிவித்தும் காவல்துறையில் அனுமதி கேட்டு மனு கொடுத்தும் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story