அங்கன்வாடி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு

அங்கன்வாடி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
உடன்குடி அருகே அங்கன்வாடி மைய மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் வருவதற்கு சற்று முன்பே விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மாநாடு தண்டுபத்து ஊராட்சி அத்தியடிதட்டில் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். வழக்கம் போல் நேற்று காலையில் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்காக பணியாளர்கள் வந்தனர். அங்கன்வாடியை மையத்தின் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்றனர். தொடர்ந்து, குழந்தைகள் அமரும் சேர்கள், விளையாட்டு சாதனங்களை பணியாளர்கள் ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று மையத்தின் மேற்கூரை காங்கிரீட் பூச்சு உடைந்து குழந்தைகளின் சேர்கள், விளையாட்டு சாதனங்கள் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்து ஓடியதால் காயமின்றி தப்பினர். அப்போது, குழந்தைகள் யாரும் மையத்துக்கு வராததால், அவர்களும் தப்பினர். உடனடியாக பெயர்ந்து விழுந்த காங்கிரீட் பூச்சுகளை அகற்றி விட்டு, மையத்தின் மாற்று இடங்களில் குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது. பின்னர் குழந்தைகள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story