நாமக்கல்லில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்..!

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார் மற்றும் 24 இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் ரூ.3.20 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு சம்பந்தமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிடமிருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்ட, ஒரு கார் மற்றும் 24 இரண்டு சக்கர வாகனங்கள்,நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுப்பதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொருவரும் ரூ. 5,000 டெபாசிட் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் நடந்த ஏலத்தில், கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்தார்.மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சங்கரபாண்டியன், பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் வாகனங்கள் பொது ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் கலந்துகொண்டவர்கள், அரசு நிர்ணயம் செய்த விலையில் இருந்து போட்டி போட்டு ஏலம் கோரினர். முடிவில், ஒரு கார் மற்றும் 24 இரண்டு சக்கர வாகனங்கள் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்து 694க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தவர்கள்,ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து பணத்தை உடனடியாக செலுத்தி, வாகனங்களை பெற்றுச் சென்றனர். கலால் மற்றும் ஆயத்தீர்வை அலுவலர்கள், அரசு போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளர் கோமளவல்லி மற்றும் போலீசார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Next Story