அய்யர்மலை சோமவார விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட புகழ்பெற்ற சிவஸ்தலமாகும். மலை உச்சியின் மேல் அமையப் பெற்ற இந்த சிவஸ்தளத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோம வார விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதிலும் 3 ஆவது சோமவார விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று மூன்றாவது சோமவார விழாவினை முன்னிட்டு அய்யர்மலை கோவில் குடிபாட்டை சேர்ந்தவர்களும் , குளித்தலை, தோகைமலை, நங்கவரம், நச்சலூர், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் மற்றும் திருப்பூர், திருச்சி, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று ரெத்தினகிரீஸ்வரர் தரிசித்து தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் அடிவாரத்தில் உள்ள பாறையில் தேங்காய் பழம் வெற்றிலை எலுமிச்சம் பழம் கொண்டு பூஜை செய்து இங்கிருந்து மலை உச்சியை பார்த்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும் அய்யர்மலை கிரிவல பாதையை சுற்றி வந்தும் வழிபட்டனர். முதியவர்கள் ரோப் கார் ஏறுவதற்கு வெகு நேரம் காத்திருந்து மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சோமவாரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் வருகை புரிவதால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story