ஆண்டிமடம் பகுதியில் நெற்பயிரில் இலை கருகல் நோய் தடுப்பு முறைகள் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை

X
அரியலூர், டிச.9- ஆண்டிமடம் பகுதிகளில் நெற்பயிரில் பாக்டீரியல் இலை கருகல் நோய் தடுப்பு முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சுமார் 2830 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலை காரணமாக நிற்பதில் பாக்டீரியல் இலை கருகல் நோயின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதன் அறிகுறிகளாக இலையின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும் இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்க நிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியில் இருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும் இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும். அதிகாலை நேரங்களில் இலைப்புள்ளியின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும் தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்து விடும். இதனால் 60%வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும். நோய் வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள் என்பது சூடான வெப்பநிலை 25 - 30 செ மழை , அதிக ஈரப்பதம் , நெற்பயிரில் மற்றும் பாசன வாய்க்காலிலும் நுண்ணுயிர் தாக்கம் காற்று கலந்த மழை, அதிக உரம் அளித்தல் ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்புகிறது . இதனை கட்டுப்படுத்தும் முறைகள் என்பது சரியான விகிதத்தில் உரமிடுதல், மிகுதியான தழைச்சத்தை அளிப்பதை தவிர்த்தல், நோய் தாக்கப்பட்ட வயதில் இருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். களைகள் மற்றும் மாற்றுப் பயிர்களை அழித்தல் முறையான பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும். 20 கிராம் பசுமையான மாட்டுச் சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதனை படியவிட்டு பின் நன்கு வடிகட்டிய சாற்றை பயன்படுத்த வேண்டும். நோய் முதல் அறிகுறி தோன்றிய உடனும் மற்றும் இரண்டு வார இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும். ரசாயன முறையில் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ரா சைக்கிளின் கலவை 300 கிராம் +காப்பர் ஆக்சி குளோரைடு 1.25 கிலோ /எக்டர் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால் ,15 நாட்களுக்கு பின் ஒரு முறை இக்கலவையை தெளிக்கலாம். மேற்கண்ட கட்டுப்பாட்டு முறையை கையாண்டு நெற்பயிரினை பாதுகாத்திட ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராதிகா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.
Next Story

