தேங்காய் எண்ணெயை சத்துணவுக் கூடங்களில் பயன்படுத்த வேண்டும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்

வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகில் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய் எண்ணெயை சத்துணவு கூடங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
100 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 53வது நாளாக வெள்ளகோவில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில அவை தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி, காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயில் ஆண்டுக்கு ரூ. 4500 கோடி மானியம் கொடுத்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்குவதுடன் அரசின் சத்துணவு கூட்டங்களிலும் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தென்னை, பனை மரங்களின் கள் இறக்குவதற்கு தடையை நீக்க வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியின் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில்  ஒன்றிய பொறுப்பாளர் வீரப்ப கவுண்டர். அதிமுக வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகரச் செயலாளர் டீலக்ஸ் மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் கந்தசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் அருண்குமார், பாஜக நகர தலைவர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story