சனாதன தர்மமும், ஆன்மீகமும்தான் பாரத நாட்டின் முக்கிய பலம்: ஆளுநர்
Chennai King 24x7 |12 Dec 2024 12:00 AM GMT
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
பாரதியாரின் 143-வது பிறந்தநாள் மற்றும் இந்திய மொழிகள் தினவிழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாகவி பாரதியார் பிறந்தநாளில் நாம் அனைவரும் அவரது வீரர்கள் என்பதால், தேசத்திற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய நேர்மறை ஆற்றலைப் பேண வேண்டும். பாரதியார் பாரதத்தையும் பாரதீய மொழிகளையும் மிகவும் நேசித்தவர். ஆதி சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர் மற்றும் பிறர் போல அவரது குறுகிய வாழ்நாளில் சமூகத்தின் எழுச்சி மற்றும் இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் அவர் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். காலனியாதிக்கத்தின் போது இழந்த தனது கடந்த கால பெருமையை மீட்டெடுப்பதற்காக இந்தியா சரியான திசையை நோக்கி திரும்பி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பல உலகளாவிய நெருக்கடிகளை தீர்க்க இந்தியாவின் தலைமையை உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில், பொய்களைப் பரப்புவதன் மூலம் நமது முன்னேற்றத்தை பலவீனப்படுத்தவும், உலக அளவில் இந்தியாவின் பெருமையை குறைத்து மதிப்பிடவும் மிஷனரிகள் மற்றும் ஜிகாதிகள் போன்ற சில எதிர்மறையான சக்திகள் உள்நாட்டிலும் வெளியிலும் உள்ளன. அரசு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்வதன் மூலம் சமூகத்தில் பிரச்சினைகளையும் அராஜகங்களையும் உருவாக்குவதுதான் அவர்களின் உத்தியாக உள்ளது. சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். இந்த தீய சக்திகளுக்கு எதிராக நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன், பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும் என ஆளுநர் பேசினார்.
Next Story