சத்தியமங்கலம் பரபரப்பு
Erode King 24x7 |12 Dec 2024 3:37 AM GMT
மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓடிய புலியால் பரபரப்பு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி மலைப்பகுதியில் யானை, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. புலி நடமாட்டம் அவ்வப்போது இருந்து வந்தது. புலிய பொறுத்த வரை அவை அடர்ந்த வனப் பகுதியில் வாழக்கூடிய விலங்காகும். அவ்வப்போது மலை கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும். இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி அடுத்த திம்பம் மலைப்பாதை முதலாவது கொண்டை ஊசி வளைவுக்கு முன் பகுதியில் வாகனங்கள் அங்குமிங்கும் சென்று வந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பிரம்மாண்ட புலி ஒன்று வேகமாக ஓடியது. புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை அந்த வழியாக வந்த காரில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவானது. மயிரிழையில் புலி அந்தக் காரில் மோதாமல் வேகமாக சாலையை கடந்தது. இல்லையென்றால் விபத்து ஏற்பட்டிருக்கும். திடீரென புலி சாலையைக் கடந்து சென்றதால் வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பின்னர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பண்ணாரி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்களும் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Next Story