விழுப்புரத்தில் வெள்ள நீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரத்தில் வெள்ள நீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்
X
அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு ஆசிரியர் நகர், நேதாஜி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெஞ்சல் புயல் கனமழையின்போது, குடியிருப்புக்குள் சூழ்ந்த மழைநீர் வடிகால் வசதியின்றி 10 நாட்களாக தேங்கியுள்ளது.மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு, கிழக்கு பாண்டி சாலையில் ஆசிரியர் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த 10 நாட்களாக சாலை இருக்கும் இடம் தெரியாத அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. தினமும் இடுப்பளவு நீரில் செல்லும் நிலை உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுவதால், அச்ச நிலை தொடர்ந்துள்ளது. பல முறை தகவல் தெரிவித்தும் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.தகவல் அறிந்து வந்த நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் ஆசிரியர் நகர் பகுதிக்குச் சென்று பார்த்த நகரமன்ற தலைவர், மழை நீரை வெளியேற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையேற்று மக்கள் 10:50 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
Next Story