அரியலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

X
அரியலூர், டிச.13 - அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கன மழை பெய்து வரும் நிலையில், வெளிப்பிரிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த வேங்கையன்(82). வியாழக்கிழமை இரவு இவரும், இவரது மனைவியும் சாப்பிட்டு விட்டு, மண் சுவர் வீட்டில் தூங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கன மழையில், வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த வேங்கையன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மனைவி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கயர்லாபாத் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து பெண் காயம்... ஆண்டிமடம் அடுத்த மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி வசந்தா(50) காயமடைந்தார். காயமடைந்த அவர், ஆண்டிமடம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

