விருத்தாசலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் விட்டுச்சென்ற பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்

விருத்தாசலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் விட்டுச்சென்ற பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்
X
நன்றி தெரிவித்த பணத்தின் உரிமையாளர்
விருத்தாசலம் நகரத்திற்குட்பட்ட வயலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் ஷாஹீன் (20). இவர் கடந்த மாதம்.28ஆம் தேதி அன்று விருத்தாசலம் ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் கார்டை சொருகி விட்டு பின் நம்பரை அழுத்தி கார்டை எடுத்த சில மணித்துளிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டதால் ஏடிஎம் இயந்திரம் நின்றுவிட்டது. இதனால் பணம் வரவில்லை என கருதிவிட்டு அவர் சென்று விட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் (75) என்பவர் பணம் எடுக்கச் சென்றபோது பத்தாயிரம் ரூபாய் பணம் ஏடிஎம்மில் இருந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விருத்தாசலம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சந்துருவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து பணத்திற்குரிய நபர் யார் என தெரியாமல் போலீசார் இருந்து வந்த நிலையில், நேற்று வயலூர் பகுதியை சேர்ந்த ஷாகின் என தெரிய வந்தது இதையடுத்து அவருடைய பணம்தான் என உறுதி செய்யப்பட்ட பின் அவரை வரவழைத்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அவரிடம் பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷாஹீன் போலீசாருக்கும் அந்த பணத்தை காவல் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்த பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்ற முதியவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் தனிப்படை தலைமை காவலர் வெங்கடேசன் மற்றும் விருத்தாசலம் காவல் நிலைய போலீசார் பலர் உடன் இருந்தனர்.
Next Story