விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு
விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கார்த்திகை மாத கிருத்திகை வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவு வந்து செல்வார்கள். இந்நிலையில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்படுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். அப்போது சிவாச்சாரியார்கள் மகாதீபாராதனை காட்ட பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பி நெய் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல, மங்கலம்பேட்டை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத கிருத்திகை பூஜை மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனை, பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் மற்றும் 108 லிட்டர் பாலாபிஷேகத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி அருள் பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதே போல விருத்தாசலம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
Next Story



