விருத்தாசலம் பகுதி ஆறுகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்

விருத்தாசலம் பகுதி ஆறுகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்
X
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கனத்த மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கட்டு நிரம்பி வருவதால் நேற்று முதல் கோமுகி அணைக்கட்டில் இருந்து மீண்டும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வெள்ளமாக வந்து மேமாத்தூர் அணைக்கட்டு நிரம்பியது. இதனால் நேற்று மாலை நிலவரப் படி 12500 கன அடி தண்ணீர் மேமாத்தூர் அணைக்கட்டில் இருந்து மணி முக்தாற்றில் உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. கோமுகி அணைக்கட்டில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், அந்த தண்ணீரால் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோமுகி அணையில் இருந்து உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் மணிமுக்தாற்றங்கரை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மேமாத்தூர் அணைக்கட்டு, விருத்தாசலம் தடுப்பணை, விருத்தாசலம் கார்குடல் அணைக்கட்டு ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல விருத்தாசலம் அருகே பெலாந்துறையில் அமைந்துள்ள வெள்ளாற்றில் வெள்ளம் இரு கறைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுவதால் பெலாந்துறை அணைக்கட்டு நிரம்பி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது இதனால் கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிமுக்தாறும் வெள்ளாறும் கூடலையாற்றூர் கிராமத்தின் அருகே இணைந்து சேத்தியாதோப்பு அணைக்கட்டு நிரம்பியதால் செத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் இருந்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story