ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம் பாதிப்படைந்த சாலை மறியலால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம்  அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம் பாதிப்படைந்த சாலை மறியலால் பரபரப்பு.
X
ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
அரியலூர், டிச.15- ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு  5-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் தெருவில் நிற்கும் தங்களையும் தங்கள் பகுதியையும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம்  உள்ளது. இக்கிராமத்தில் வி.கைகாட்டி மற்றும் பெரியத்தெரு பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக வட வீக்கம் காலனி கைகாட்டி பஸ் நிறுத்தம் மற்றும் பெரியத்தெரு பகுதிகளில் தெருக்கள் மற்றும் வீடுகளை சுற்றி மழை வெள்ளநீர் தேங்கி ஏரியை போல் காட்சியளித்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாமலும், வீட்டிற்கு உள்ளே உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் ரோட்டிலேயே நின்று உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக 5- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் அப்ப பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுமே மழை வெள்ளத்தில் சுவர்கள் ஊறி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை என கூறி இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வட வீக்கம் காலனி தெருவில் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார்  3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்ட போதே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் எனினும் சாலை அமைக்கப்பட்டு விட்டதால் சாலைகளில் செல்லக்கூடிய மழைநீர் அனைத்தும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வெளியே செல்ல முடியாத அளவில் தேங்கியுள்ளது. எனவே வருங்காலங்களில் சாலைகளில் செல்லும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் புகாதவாறு நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு .ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், முன்னாள் அரியலூர் மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முத்துக்குமார் (கிராம ஊராட்சி) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம் மற்றும்,ஊராட்சி செயலாளர் ராதா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தொடர்ந்து அவர்களை தண்டலை அரசு பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் மற்றும் உடைகள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தண்ணீரை வெளியேற்ற ஒவ்வொரு இடமாக மழை நீரை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் பணி மேற்கொண்டு வந்ததை மக்கள் அறியாமல் தங்களிடம் கோபித்துக் கொண்டதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story