உடைப்பை சீரமைக்க கோரி தாசில்தார் முற்றுகை

X
தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தால் ஏற்பட்ட திருக்கோவிலுார் அணைக்கட்டு கரை உடைப்பை சீரமைக்கக்கோரி தாசில்தாரை ஏமப்பேர் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த 2ம் தேதி தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், திருக்கோவிலுார் அணைக்கட்டின் கரை பகுதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெண்ணையாற்றின் நீர் ஏமப்பேர், அருமலை, கீழக்கொண்டூர் கிராமங்கள் வழியாக பயிர்களை மூழ்கடித்தது. இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு அப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற கண்டாச்சிபுரம் தாசில்தார் கிருஷ்ணதாஸ், பொதுப்பணித்துறை பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகளை ஏமப்பேர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து ஏமப்பேர் சாலை வரை உள்ள 300 மீட்டர் அணைக்கரையில், 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் கல் மற்றும் மண் கொட்டி 210 மீ., துாரத்திற்கு புதிதாக கரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் வடியும் சூழலில் இது முழுமையாக கட்டி முடிக்கப்படும்' என்றனர்.
Next Story

