மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நெடுந்துார ஓட்டப் போட்டி

மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நெடுந்துார ஓட்டப்  போட்டி
X
சிவகங்கை மாவட்டம், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நெடுந்துார ஓட்டப் (Marathon) போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (14.12.2024) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில், ”மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி / கல்லுாரி மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் கலந்துகொள்ளும், நெடுந்துார ஓட்டப்போட்டி (Marathon) இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. கடந்தாண்டும் டிசம்பர் மாதத்தில் இதேபோன்று நெடுந்துார ஓட்டப்போட்டியானது (Marathon) முதன்முறையாக மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இப்போட்டியானது இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற பொருட்டு, விழப்புணர்வு உறுதிமொழியும் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. இவ்வகையான நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்களிடையே மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நோக்கமே ஆகும். இதுபோன்று மாவட்டமுழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் பொதுமக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய தினம்(டிச.13) நடைபெற்ற விழிப்புணர்வு நெடுந்துார ஓட்டப்போட்டியானது (Marathon) மொத்தம் 5 கி.மீ தூரம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, திருப்பத்தூர் சாலை, கோர்ட் வாசல், சிவகங்கை தாலுகா அலுவலகம், LIC, புதிய நீதிமன்றம், மகளிர் கல்லூரி, மற்றும் திருப்பத்தூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்வட்டபாதையில் மின்வாரிய அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கட்டிட வாசல் முன்பு நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், குறிப்பாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆகியோர் கலந்து கொண்டு, இப்போட்டிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 14-18 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.10,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000/-மும் மற்றும் சிறப்பு பரிசாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000/-மும் பரிசுத்தொகை, பதக்கம் (medal), கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் Appreciation Certificate ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக்கொள்ளும் வகையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும், இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைவரும் கருத்தில் கொண்டு, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், உதவி ஆணையர் (கலால்) ரெங்கநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் (சிவகங்கை) அமல அட்வின், கோட்ட கலால் அலுவலர் ரெத்தினவேல் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story